திருநீர்மலை பேரூராட்சியில் உள்ள வீரராகவன் ஏரியை நம்பி, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, குரோம்பேட்டை, கக்கலஞ்சாவடி பகுதிகளில் விவசாயம் நடந்து வந்துள்ளது. காலப்போக்கில் ஏரி கண்டுகொள்ளப்படாததால் பலரும் ஆக்கிரமித்து லட்சுமிபுரம், நியூ காலனி, துர்கா நகர் எனப் புதிய பகுதிகள் உருவாகியுள்ளன. இதனால் 60 ஏக்கராக இருந்த ஏரியின் சுற்றளவு தற்போது 20 ஏக்கராக சுருங்கிவிட்டது.
அதோடு, அப்பகுதிகளில் இருந்தும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்தும் கழிவு நீர் அதிகமாக கலப்பதால், ஏரி நீர் முழுவதும் கழிவு நீராக மாறிவிட்டது. இதனால் ஏரியின் பெரும் பகுதி மாசடைந்து, ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து, நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஏரிக்கு மழைநீர் வரும் பகுதியான பச்சை மலையில் இருந்து ஏரி வரை இருந்த வாய்க்கால்கள் அனைத்தும் குப்பை மேடுகளாக உருமாறிவிட்டன.
60 ஏக்கர் ஏரி 20 ஏக்கர் கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்! பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கும் வீரராகவன் ஏரியை அளவீடு செய்து, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும் எனவும், தினமும் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் அப்பகுதியினர் கோருகின்றனர். மேலும், ஏரியை தூய்மைப்படுத்தி முறையாக சீரமைத்தால் இங்கு நிரம்பும் நீரை குடிநீராகவும் பயன்படுத்தலாம் என்றும் யோசனை தெரிவிக்கின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால், மழைக்காலங்களில் வெள்ள நீர் வெளியேற முடியாமல் அரசு மருத்துவமனைக்குள்ளும், குடியிருப்புக்குள்ளும் புகுந்து விடுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்டு சீரமைத்தால் மட்டுமே வீரராகவன் ஏரி மட்டுமல்லாது அப்பகுதி மக்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
இதையும் படிங்க:5 நாட்களாகியும் அகற்றப்படாத மழைநீர்! - தொற்று பரவும் ஆபத்து!