சென்னை:சென்னை பெருநகர காவல் துறையின் புனித தோமையர்மலை காவல் மாவட்டத்தில் இயங்கி வருகிறது ஆதம்பாக்கம் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலன். இவர் மீது, அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தன்னை கடுமையான வேலைகள் மேற்கொள்ளுமாறு தொந்தரவு செய்வதாகவும், பணிச் சுமை காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்பார்கள், என்னுடைய மரணம் தான் ஆதாரம் என்றால் தற்கொலை செய்து கொள்ள தயார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து, காவல்துறை உயர் அலுவலர்கள், துறைரீதியான விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது விசாரணையில் அம்பலமானது. இதன் காரணமாக பெண் ஐபிஎஸ் அலுவலர், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பாலியல் புகார் குறித்து விசாரிக்க "விசாகா" கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
"விசாகா" கமிட்டி என்றால் என்ன?
'பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013'இன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் பற்றி புகார் தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது விதி. பத்து பெண் ஊழியர்களுக்கும் மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்கள், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்த கமிட்டியின் தலைவராக பெண் அலுவலரை நியமனம் செய்து, சட்ட வல்லுநர், பெண் உரிமை செயற்பாட்டாளர் உள்ளிட்டோர் இந்த கமிட்டியில் இடம் பெறுவர். விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் இதற்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறையில் பெண் அலுவலர் ஒருவருக்கு உயர் அலுவலரால் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த போது, கூடுதல் டிஜிபி பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு காவல்துறையில் தற்போது தான் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரம்: தலைமைக் காவலருக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!