சென்னை: நாட்டிலேயே கரோனா தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதால் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு, தளர்வுகள் அற்ற ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
அதனடிப்படையில் மே 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு கூட அனுமதி இல்லை என அரசு அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வெவ்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காகவும், வேலை இன்றியும், வாழ்வாதாரம் இன்றியும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாகவும் 21,22 ஆகிய இரண்டு நாள்கள் அரசு மற்றும் தனியார் பேருந்து இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
கோயம்பேடு நிலவரம் குறித்து செய்தியாளர் வைத்தீஸ்வரன் தரும் நேரடித் தகவல்கள் இதன் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். அரசு சார்பில் இரண்டு நாட்களில் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 1,500 பேருந்துகளும், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் 3,000 பேருந்துகளும் என ஒட்டுமொத்தமாக 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஊடகங்களில் செய்தியை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பேருந்து நிலையத்திற்கு விரைந்தனர். ஆனால், இங்கு போதுமான முன்னெற்பாடுகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படவில்லை. பதிலாக பொதுமக்களின் வகைக்கேற்ப ஆங்காங்கே பேருந்துகள் இயக்கப்படுகிறன. இதனால் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது என அவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்டால் முறையான விளக்கமும் அளிக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மதுரை, நாகர்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குக் கூட தேவையான பேருந்து வசதிகள் இல்லை என்று கூறும் பொதுமக்கள், ஒரு பேருந்துகளில் முழு இருக்கை நிரம்பும் வரையில் பொதுமக்களை வெளியில் காத்திருக்க வைத்து பின்னர் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனை முறைப்படுத்த போதுமான போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் பேருந்துக்கு முந்தியடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல பேருந்துகளிலும் தகுந்த இடைவெளி ஏதும் கடைபிடிக்கப்படாமல் அருகருகே பயணிகளை அமரவைத்து, முழு இருக்கைகளும் நிரம்பியே பேருந்துகள் இயக்கப்படுகிறன. பேருந்து சேவை முன்னேற்பாடுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து சென்னை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்ட போது, "தேவையான முன்னெச்சரிக்கை வசதிகள் முறையாக செய்யப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப ஆங்காங்கே பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பணியில் உள்ளதாகும் பதிலளித்தார்.
மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தொற்று பாதிப்பு கடுமையாக உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதால் பொதுமக்கள் இத்தனை நாட்கள் கடுமையான ஊரடங்கை பின்பற்றி பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டது வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இதனை முறைப்படுத்தி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போதுமான பணியாளர்களை நியமித்து, பேருந்துகளை குறைந்தபட்சம் 50 விழுக்காடு பயணிகளுடன் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.