தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆர்டர் இல்லை, வேலையாள்கள் இல்லை; தலைக்கு மேல் தொங்கும் கடன் - கலக்கத்தில் நிறுவனங்கள்

சென்னை: உரிய வேலையாள்கள் கிடைக்காமலும், புதிய ஆர்டர்கள் இல்லாமலும் சிக்கித் தவித்துவரும் சிறு, குறு தொழில்நிறுவனங்கள், கடன் சுமை காரணமாக விழிபிதுங்கி தவித்துவருகின்றன.

msme-industries
msme-industries

By

Published : Aug 29, 2020, 12:13 AM IST

முழு ஊரடங்கு முடிந்து மீண்டும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு மூன்று மாதங்களான நிலையிலும் புதிய ஆர்டர்கள் கிடைக்காதது, தொழிலாளர்கள் கிடைக்காதது, நிதிச்சிக்கல் ஆகியவற்றால் சிறு, குறு நிறுவனங்கள் திண்டாடிவருகின்றன.

நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும் நோய் பாதிப்பைவிட பொருளாதார பாதிப்புகள் பெருமளவில் இருப்பதால் அரசு தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மீண்டும் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகளை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு 3 மாதங்களான நிலையிலும் தற்போது வெறும் 20 விழுக்காடு மட்டுமே செயல்பாடு நடைபெற்றுவருவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கரோனா பாதிப்பு, வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறியது, புதிய ஆர்டர்கள் கிடைக்காததால் ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் திணறிவருவதாகக் கூறுகிறார் சிறு நிறுவனங்களுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் கிரீஷ் பாண்டியன்.

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய அவர், "கரோனா பாதிப்புக்கு முன்பாகவே பொருளாதார சரிவால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைந்துவந்தன. தற்போது தளர்வுகளுக்குப் பிறகு 20 முதல் 30 சதவிகித கொள்ளளவுடன் பணியாற்றிவருகின்றன. ஊரடங்கு காரணமாக வடக்கு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இதனால் இங்கு பணியாற்றத் தேவையான ஆள்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. கட்டுமான துறையினர் இங்கிருந்து சென்ற வடமாநிலத் தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துவந்து பணியாற்றுகின்றனர். ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களால் அவ்வாறு செய்ய முடியாது" என்றார்.

கிரீஷ் பாண்டியன் பேட்டி

தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் வேலையிழந்துள்ள நிலையில் இங்குள்ள மக்களை வைத்து பணியாற்ற முடியாதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் பயிற்சி அளித்துள்ளோம். தற்போது புதியவர்களுக்கு மீண்டும் பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்துவது கடினமான வேலை.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கடுமையான இயந்திரப் பணியில் ஈடுபட விரும்பவில்லை. பணி ஆள்கள் பிரச்னை ஒருபுறமிருக்க, எங்களுக்கு புதிய ஆர்டர்களும் கிடைப்தில்லை.

சென்னை, அதனைச் சுற்றியுள்ள சிறு, குறு நிறுவனங்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்களை நம்பியே உள்ளன. தற்போது பொருளாதாரச் சரிவு, வேலையிழப்பு, வருவாய் இழப்பு ஆகியவற்றால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து, இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை விற்பனையாகவில்லை. இதனால் அவர்களை நம்பியிருக்கும் எங்களைப் போன்ற சிறு, குறு நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்" என்றார்.

கரோனாவால் வருவாய் இழந்துள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு அவசர கடனுதவித் திட்டத்தை அறிவித்து அதன் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளது.

தொடக்கத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் கடன் கிடைக்கவில்லை எனப் பல்வேறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் புகார் தெரிவித்தாலும் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் கடன் வசதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இருப்பினும் இது தற்காலிக உதவியாகவே அமைந்துள்ளது எனத் தொழில்துறையினர் கூறுகின்றனர். கடனுதவி திட்டத்தின்படி ஓராண்டுக்கு கடனை திரும்பச் செலுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவரை இங்குள்ள நிறுவனங்கள் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுவதாக கூறுகின்றனர் தொழில் நடத்துபவர்கள்.

இது பற்றி பேசிய கிரீஷ் பாண்டியன், "அரசு அறிவித்த கடனுதவித் திட்டத்தால் 50 முதல் 60 சதவிகித நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பெற்றன. ஆனால் பலரும் கரென்ட் அக்கவுன்டில் இருந்து செலவழித்து வருகின்றனர். அதுபோன்றவர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை.

மேலும், கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு, வங்கிகள் வாயிலாக கண்காணித்துவருகிறது. இதனால் வங்கிகள் முறையாக கடன்களை வழங்கிவருகின்றன. ஆனால் கடன் மறுசீரமைப்புத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. இதனையும் அரசு கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் காலகட்டத்திலும் கடன்களைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு வங்கிகள் சர்ஃபாசி (sarfaesi act) சட்டத்தின்கீழ் உடமைகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்புகின்றன.

ஐந்து கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீது வாராக்கடன் நடைமுறைகளைக் கையாளுவதையும், சர்ஃபாசி சட்டத்தை பின்பற்றுவதிலிருந்தும் வங்கிகள் தடுக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளோம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மேலும் கூடுதல் சிறப்பு உதவித் திட்டங்களை அறிவித்து கரோனா பிரச்னை சீராகும் வரை வழி நடத்த வேண்டும்" என்று கூறினார்.

சில நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் போக்குவரத்து முடக்கம், தொழிலாளர் பற்றாக்குறை, ஊரடங்கு ஆகியவை பெரும் சவாலாக உள்ளதாகக் கூறுகிறார் கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க கூடுதல் செயலாளரும், பாதுகாப்பு உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவருமான கனகமூர்த்தி.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "எங்கள் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக காகித ஆலை, சக்கரை ஆலை, பாதுகாப்பு தளவாட உதிரிபாகங்கள், இஸ்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வழங்கிவருகிறோம்.

தற்சமயத்தில் எங்களுக்குப் போதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் தொழிலாளர்கள் கிடைக்காதது பெரும் பிரச்னையாக உள்ளது. உள்ளூர் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் கேட்கிறார்கள்.

கனகமூர்த்தி பேட்டி

முன்பு 50 நபர்கள் வேலைபார்த்து வந்த தொழிற்சாலையில் தற்போது 20 நபர்கள்தான் வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் சென்றுவர வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. தொழிற்சாலையில் பணியாற்றும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, இடத்தை தூய்மைப்படுத்துவது அன்றாடம் சாத்தியமாக இல்லை. இதனால் கூடுதல் செலவாகிறது. பொதுப்போக்குவரத்து மீண்டும் செயல்படுத்தப்பட்டால்தான் இயல்புநிலை திரும்பும்.

இஸ்ரோவுக்காக 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை உற்பத்திசெய்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம், ஆனால் பொருள்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொள்ளும் அதிகாரி இங்கு வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவோம் என அஞ்சுகிறார்.

இதனால் பல மாதங்களாக பொருள்கள் தேங்கியுள்ளன. டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதிக அளவிலான கட்டுப்பாடுகள் தொடருவது சிரமமாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:2020 நிதியாண்டில் ரூ.1.86 லட்சம் கோடி வங்கி மோசடி - ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

ABOUT THE AUTHOR

...view details