சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இன்று (ஆக.3) செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார்.
அப்போது பேசிய அவர், "ஜிஎஸ்டி வரி உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற எதிர்க்கட்சிகளின் ஆணித்தரமான கேள்விகளுக்குப் பாஜகவால் பதில் சொல்ல முடியாமல், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்லியுள்ளார். பாஜக அரசு, 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. கடந்த 52 ஆண்டுகளாக சுதந்திர தினமே பாஜக கொண்டாடவில்லை. ஏன் கொண்டாடவில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.
சட்டத்தை அண்ணாமலை படிக்கவேண்டும்:எனக்கு எதுவுமே தெரியாது என பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அண்ணாமலை போல், 20 ஆயிரம் புத்தகங்களை நான் படிக்கவில்லை; அரசியல் சட்டத்தை அண்ணாமலை எனக்கு அனுப்பி வைக்கவேண்டாம். அரசியல் சட்டத்தை படித்து புள்ளி விவரங்களோடு நான் தேர்வு எழுதப்போவதில்லை.
குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டிய நீட் மசோதாவை, ஆளுநர் மீண்டும் அரசுக்கு அனுப்பியதே தவறு. முதலில் அண்ணாமலை அரசியல் சட்டத்தைப்படிக்க வேண்டும். சில நாகரிகங்கள் கருதி நீதித்துறையில் இருப்பவர்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை. மேலும் எஜமான தத்துவத்தை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். பொறுப்பெற்ற முறையில் பேசுவதில் அண்ணாமலை கெட்டிக்காரராக இருக்கிறார். திமுக அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை எதையாவது நிரூபித்து உள்ளீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டிற்கு வாருங்கள் பார்க்கலாம்:அமலாக்கத் துறையை வைத்து சிவசேனாவை பயமுறுத்தியது போல திமுகவை பயமுறுத்தலாம் என நினைக்கிறார்கள். அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு போய்விடுமா? மகாராஷ்டிராவில் போகலாம்; வங்காளத்தில் போகலாம்; தைரியம் இருந்தால் தமிழ்நாட்டிற்கு வாருங்கள். பாஜக அரசாங்கம் இதுவரை 3000 இடங்களுக்கும் மேல் அமலாக்கத்துறையை அனுப்பியுள்ளது. ஆனால், தண்டனை பெற்றவர்கள் யாரும் இல்லை. எல்லோரையும் பயமுறுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். எல்லையைத்தாண்டும் போது பிரச்னைகள் வரும் என்பதை நினைவுபடுத்துகிறேன். சித்தாந்த பலம் உடைய காங்கிரஸ் கட்சி அனைத்தையும் தகர்த்தெறியும்.
கருணாநிதிக்கு பேனா வைப்பதில் தவறேது: மேலும், 5 ஜி ஏலத்தில் அரசு எதிர்பார்த்த தொகை எப்போது வரவில்லையோ டெண்டரை கேன்சல் செய்திருக்க வேண்டும். அரசும் முதலாளிகளும் சேர்ந்து செய்த கூட்டு சதி தான் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம். பிஎஸ்என்எலை பாஜக சாகடித்து விட்டது. இது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டாம் என்று சொல்பவர்களின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க வேண்டும். இலக்கிய நயமிக்க அவரின் நினைவாக பேனா வைப்பதில் எந்த தவறும் இல்லை. அதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.9 மாதம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டம் தோறும் 75 கிலோ மீட்டர் நடை பயணம் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கொள்ள இருக்கிறோம். மத்திய அரசின் தவறான சமூக பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மாவட்டந்தோறும் நடைப்பயணம் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'செங்களம்' தான் சரி 'சதுரங்கம்' அல்ல!