சென்னை: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் செப்டம்பர் மாதம் வரை திறந்துவிடப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறினர்.
பொதுப்பணித்துறை அலுவலர்களின் கூற்றுப்படி, தெலுங்கு-கங்கா திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீர் கொடுக்கவேண்டும். அதன்படி, கடந்த மாதம் ஆந்திர நீர்ப்பாசனத்திலிருந்து 2,200 கனஅடி கிருஷ்ணா நதி நீர் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்டது.
எனினும், கடந்த ஒரு வாரத்திற்குமுன் 2,200 அடியிலிருந்து 1,700 அடியாக குறைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையினால் அணைக்கு நல்ல நீர்வரத்தும் இருந்தது.
செப்டம்பர் வரை..
இதுகுறித்து ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (பூண்டி ஏரி) கூறுகையில், "இன்றைய நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 650 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும், ஏரியின் நீர் மட்டம் சற்றே உயர்ந்துள்ளது என்றும் கூறலாம்.
'பூண்டி நீர்த்தேக்கத்திற்கு செப்டம்பர் மாதம்வரை கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்படும்' உதாரணமாக ஜூலை 4ஆம் தேதியன்று ஏரியின் நீர் இருப்பு வெறும் 493 மில்லியன் கியூபிக் அடியாக இருந்தது. ஆனால் இன்று (ஆகஸ்ட், 4) ஏரியின் நீர் இருப்பு 2018 மில்லியன் கியூபிக் அடியாக உயர்ந்துள்ளது.
ஆந்திர நீர்ப்பாசன அலுவலர்கள் கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து கிருஷ்ணா நதிநீரை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்" எனக் கூறினார்.
தற்போதைய சென்னை மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 6,738 மில்லியன் கியூபிக் அடியாக இருக்கின்றபோதிலும், சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் அலுவலர்கள், வரும் காலங்களில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வருகிற வடகிழக்குப் பருவ மழையையும் நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சிதம்பரத்தில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'