கோயம்பேடு காய்கறி சந்தை கரோனா தொற்றின் மையப்புள்ளியாக உருவெடுத்து, மாநிலம் முழுவதும் வியாபாரிகள், பொதுமக்கள், லாரி ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று பரவியது. இதனையடுத்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. திருமழிசையில் காய்கறி சந்தையும், மலர் சந்தை வானகரம் பகுதிக்கும் மாற்றப்பட்டன.
இதனிடையே, கரோனா பாதிப்பு குறையா விட்டாலும் கட்டுக்குள் இருப்பதால், கோயம்பேடு காய்கறி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்ததையடுத்து சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு செல்வோருக்கு கரோனா சோதனை, கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் சந்தைக்குள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.