கோயம்பேடு சந்தைக்கு தொடர்புடையோரிடமிருந்து மாநிலம் முழுவதும் கரோனா கடுமையாக பரவியதையடுத்து, சந்தை முற்றிலுமாக மூடப்பட்டது. இந்நிலையில், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கோயம்பேடு உணவு தானிய சந்தை மட்டும் இன்று திறக்கப்பட்டது. வருகின்ற 28 ஆம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உணவு தானியக் கடைகளை தூய்மைப்படுத்தி, பொருட்களை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் மும்முரமாகியுள்ளனர். சந்தைக்கு வருவோர் அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை நடத்தப்படுகிறது. மேலும், அங்கு வரும் இருசக்கர வாகனங்களின் எண்களும் குறித்து வைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா இது குறித்து நம்மிடம் பேசியபோது," நீண்ட நாட்களுக்குப் பின் தானிய சந்தை திறக்கப்பட்டுள்ளது. இது வியாபாரிகள் மத்தியில் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற 28 ஆம் தேதி காய்கறி சந்தை திறக்கப்படும் அன்றே, பழம், செமி ஹோல்சேல் மார்க்கெட்டையும் திறக்க வேண்டும் எனக் கோருகிறோம். நகராட்சி கட்டடங்களில் வாடகைக் கட்ட இயலாத வியாபாரிகளுக்கு 6 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும். கரோனாவால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் " என்றார்.