சென்னை:கொளத்தூர் லலிதா நகரை சேர்ந்தவர் சூரியன் (29). அதே பகுதியில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு(அக்.27) சூரியன் நண்பர் ஒருவரை பார்த்து விட்டு, காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
இதனையடுத்து, கொரட்டூர் 200அடி சாலை, தாதாங்குப்பம் பாலம் அருகில் காரில் சென்று கொண்டிருந்த பொழுது, பின்னால் பைக்கில் வந்த இருவர் சூரியன் காரை வழிமடங்கி அவரிடம் வீண் தகராறு செய்து முகத்தில் கையால் தாக்கியும், பீர் பாட்டிலை உடைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.1000/- பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து பைக்கில் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து, சூரியன் தனது காரை வேகமாக ஓட்டி கொண்டு அவர்களை விரட்டி சென்றுள்ளார். பின்னர், இருவரையும் அரும்பாக்கம் பகுதியில் கார் மூலம் பைக்கை இடித்து கீழே தள்ளி உள்ளார். மேலும் அங்கு ரோந்து பணியில் இருந்த அரும்பாக்கம் உதவி ஆய்வாளர் குமாரசாமி உதவியுடன் இருவரையும் பிடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்துள்ளார்.