கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணு உலை திட்டத்தை கைவிட வேண்டும், கூடங்குளத்தில் அணு உலைப்பூங்கா அமைக்கக் கூடாது, அவ்வாறு அமைப்பதால் அங்கே மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நிலை ஏற்பட்டுவிடும் என பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. அதில் ஒரு அமைப்பான அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கம், கூடங்குள அணுக்கழிவு அபாயம் எச்சரிக்கை மாநாட்டை சென்னை சேப்பாக்கத்தில் நடத்தி வருகிறது.
‘அணுக்கழிவை புதைப்பதும், அணு உலை உடைப்பும் வேறு வேறு அல்ல’ - மி.தா.பாண்டியன் சிறப்புப் பேட்டி! - koodangulam neuclear issue
சென்னை: கூடங்குளம் அணுக்கழிவை புதைப்பதும், அணு உலை வெடிப்பால் ஏற்படும் பாதிப்பும் வேறு வேறு அல்ல என அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் மி.தா.பாண்டியன் ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
இந்த மாநாட்டின் துணை ஒருங்கிணைப்பாளர் மி.தா.பாண்டியன் ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டதில் இருந்து அதனால் ஏற்படும் அபாயம் தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசுகள் அதனை கண்டுகொள்ளவில்லை. அப்போதிலிருந்தே அணு உலைக் கழிவுகளை என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த அந்த நிர்வாகம், கோலார் தங்கச் சுரங்கத்தில் புதைக்க திட்டமிட்டது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்து போராடி அதனை தடுத்தார்கள்.
உலக அளவில் இன்னும் அணு உலைக் கழிவுகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் விழித்துக்கொண்டு உள்ள நிலையில் அதனை கூடங்குளத்திலேயே புதைப்பது என்கிற முடிவுக்கு வந்துள்ளது அந்த நிர்வாகம். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், அணுக்கழிவு கதிர்வீச்சும், அணு உலை வெடிப்பால் ஏற்படும் கதிர்வீச்சும் வேறு வேறு அல்ல என்னும் அளவிற்கு அபாயகரமானதாகும். எனவே தமிழ்நாட்டில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அணுக்கழிவுகளை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அணு உலைத் திட்டங்களை கைவிட வேண்டும் என கோரியும் போராட்டம் நடத்த உள்ளோம். அதன் முதல்படிதான் இந்த அணுக்கழிவு அபாயம் எச்சரிக்கை மாநாடு” என்றார்.