தமிழ்நாடு - கேரளா இடையே முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதிநீர் பிரச்னைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதுகுறித்து இரு மாநில முதலமைச்சர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அலுவலர்கள் மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில், இதுவரை எந்தவித சுமூகத் தீர்வும் ஏற்படவில்லை.
இந்நிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு ஏற்படுத்துவதற்காக இரு மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைக் கேரள அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து இரு மாநில முதலமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கிறது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு அமைச்சர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, இரண்டு மாநில நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.