கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில், கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காணொலி வெளியிட்டதாக, நாத்திகன் என்ற சுரேந்தர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சுரேந்தர், புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி சரணடைந்தார். பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்குப் பிணை வழங்க வேண்டும் என எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுரேந்தர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ”2017ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செயல்பட்டுவரும் யூடியூப் சேனலில், பொதுநல நோக்கத்தோடு பல பதிவுகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
அதன்படி, கடந்த ஜனவரி 1ஆம் தேதி பதிவிடப்பட்ட கந்தசஷ்டி கவச விமர்சனத்திற்கு, அரசியல் ஆதாயத்திற்காகவும் மலிவான விளம்பரத்திற்காகவும் ஆறு மாதங்களுக்குப் பிறகு பாஜகவினர் என் மீது புகார் அளித்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு தகவல்களைத் திரட்டி, அறிவியல் ரீதியில் பதிவுகள் வெளியிட்டுவரும் எங்கள் மீது, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் காணொலி வெளியிட்டதாக 153 சட்டப்பிரிவில் வழக்குப் பதிந்துள்ளது சரியானது அல்ல.