சென்னை:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ஆவது நினைவு நாளை முன்னிட்டு, இன்று(ஆகஸ்ட் 7) பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 'கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி' நடைபெற்றது.
இம்மாரத்தான் போட்டிக்கான 5 கி.மீ., தூரப்போட்டியை திமுக இளைஞர் அணிச்செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும், 10 கி.மீ., போட்டியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவும், 21 கி.மீ., போட்டியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், 42 கி.மீ., போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் தொடங்கி வைத்தனர்.
இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43,320 பேர் பதிவு செய்து கலந்துகொண்டனர். இதில் 10,985 பேர் பெண் போட்டியாளர்கள் ஆவர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட ரூ.1,20,69,980 தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.