சென்னை : கவிஞர் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன். பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட இவர், தற்போது சிறுகதை எழுத்தாளராகவும் மாறியிருக்கிறார். 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றை எழுதியுள்ளார். அம்பறாத்தூணி எனப் பெயரிடப்பட்டுள்ள, இத்தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
தன் சிறுகதைத் தொகுப்பு குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், ”15 மனிதர்கள், 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு தான் அம்பறாத்தூணி. கதை மாந்தர்களைத் தேடும்போது சுவாரசியமான விஷயங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனத் தேடுதலை தொடங்கினேன். அதில், பல வித்தியாசமான தகவல்கள் கிடைத்தன. அவற்றைத் தான் அம்பறாத்தூணியில் பதிவு செய்துள்ளேன்.
புத்தகத்தில், 1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. சங்கரன்கோவில் சன்னியில், மன்னர் தெய்வத்தை வழிபாடுவதாக ஒரு காட்சி. அவர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதைக் கற்பனையாக எழுதுவதை விட, பூலித்தேவர் பாடிய பாடல் ஏதேனும் உண்டா என்று ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு பல்வேறு தரவுகளில் தேடினேன். அப்படி ஒரு பாடல் கிடைத்தது. மன்னர் பாடிய அந்தப் பாடலைத் தான் சிறுகதையில் பயன்படுத்தியிருக்கிறேன்.
வேற்றுமொழி கார்டூன் தொடர்களுக்கு தமிழில் குரல் கொடுப்பவர்களுக்கான குரல் தேர்விற்கு கையாளப்படும் தேர்வு முறைகள் என்னென்ன எனத் தேடியபோது, மும்பையில் நடந்த ஒரு வினோதமான தேர்வுமுறை என்னை ஈர்த்தது. அது ஒரு சிறுகதையாகி இருக்கிறது.
கடந்த, 1876ஆம் ஆண்டு, சென்னை மாகாணப் பெரும் பஞ்சத்தை பிரிட்டிஷ் ராணுவ புகைப்படக்கலைஞர் வாலஸ் ஹூப்பர் என்பவர் புகைப்படம் எடுத்தார். அவரை மனதில் கொண்டு வில்லியம் ஹூப்பர் என்ற கதாபாத்திரத்தை ஒரு கதையில் எழுதியிருக்கிறேன்.