தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கு - சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கில், தனக்கு விதித்த ஆயுள் தண்டனைக்கு எதிரான, எஸ்ஐ செல்லமுத்துவின் மேல்முறையீடுக்கு நான்கு வாரங்களில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
எஸ்ஐ செல்லமுத்துவின் மேல்முறையீட்டு மனுக்கு

By

Published : Oct 26, 2021, 10:46 PM IST

சென்னை:கடந்த 2003 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன், கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரையும் கண்டுபிடித்து கொண்டு வந்து புதுக்கூரைப்பேட்டை முந்திரித்தோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இரு காவலர்கள் உள்பட15 பேர் மீது வழக்கு

இது குறித்து, விருத்தாசலம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2004 ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனையும், கண்ணகியின் தந்தை துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து, கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி, அப்போதைய காவல்துறை ஆய்வாளர் செல்லமுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக அந்த மனுவில், தான் குற்றவாளி என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதால் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு 17 ஆண்டுகள் கழித்து, 49 சாட்சிகளை விசாரித்து முடித்த பின்னர், கடந்த 2020 ம் ஆண்டு தான் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ்க் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், 29 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் சிபிஐ யின் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று தெளிவாகியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐ பதிலளிக்க உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வு, நான்கு வாரங்களில் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

இதையும் படிங்க:2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details