தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: மரண தண்டனை ஆயுளாக குறைப்பு! - கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு

By

Published : Jun 8, 2022, 6:07 PM IST

சென்னை:கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் - கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரையும் புதுக்கூரைப்பேட்டை முந்திரித்தோப்பிற்கு கொண்டு சென்று, வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து, பின்னர் எரித்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து, விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், உறவினர்கள் ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கண்ணகியின் தந்தை துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து 2021 செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இரண்டு பேரை விடுதலை செய்தது.

இந்நிலையில் மரண தண்டனையை உறுதிபடுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதேபோல தண்டனையை ரத்து செய்ய கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காக பதியப்பட்டதாகவும், சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பொறுந்தாது என்றும் வாதிடப்பட்டது.

சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்த கொலை சம்பவத்திற்கு தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவ கொலைதான் என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இன்று (ஜுன். 8) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உத்தரவிட்டது. அதேசமயம், கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தும் உத்தரவிட்டுள்ளனர். துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details