சென்னை:திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விமான நிலையத்தில் தான் தரக்குறைவாக நடத்தப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இன்று (ஆகஸ்ட் 9) விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், "நீங்கள் இந்தியனா?" என்று என்னிடம் கேட்டார்.
கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 42ஆக உயர்வு; 12 பேர் உயிருடன் மீட்பு!
இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கு அவரது பக்கத்தை பின்தொடருவோர் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு, மொழி திணிப்பு கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.
முன்னதாக, இன்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற, சென்னை விமான நிலையத்துக்கு கனிமொழி சென்றார். நாளை (ஆகஸ்ட் 10) டெல்லியிலுள்ள நாடாளுமன்ற துறைசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் கனிமொழி.
இதையடுத்து கனிமொழி விமான நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்த சிஐஎஸ்எஃப் பெண் அலுவலர், கனிமொழியிடம் இவ்வாறு பேசியிருப்பதை கனிமொழியின் ட்விட்டர் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு!
"கனிமொழி ஒரு மக்களவை உறுப்பினர் என்பதால், அதற்குரிய வழிமுறைகளின்படி அவருக்கு விமான நிலையத்தில் தரப்பட்டிருக்க வேண்டிய முன்னுரிமை அல்லது முக்கியத்துவத்தில் ஏதேனும் குறைபாடு எழுந்ததா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்" என்றும் விமான நிலைய பாதுகாப்பு பொறுப்பு உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.