சென்னை:திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் கவிக்கோ ஹைக்கூ கவிதைகள் 2022 என்னும் போட்டியை அறிவித்தார். இந்த போட்டிக்கு பல்லாயிரக்கணக்கான படைப்புகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நேற்று (ஜுன் 2) நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக கனிமொழி எம்பி கலந்துகொண்டு சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அதோடு 'வாடியது கொக்கு' என்ற நூலினையும் வெளியிட்டார். அப்போது பேசிய கனிமொழி, "எனக்கு மிகவும் பிடிக்காதது. என்னுடைய படங்களை பரிசாக பெறுவது. ஆனால், இந்த பரிசைக் கண்டு நான் வியந்தேன். 65 ஆயிரம் கலைஞரின் படங்களை இடம்பெறும் வகையில் வரையப்பட்ட இவ்வோவியம் என்னை நெகிழச் செய்துள்ளது.
கவிஞர் அப்துல் ரகுமான் கருணாநிதியின் நண்பராக இருந்தவர். என்னிடம் அன்பாக பேசக்கூடியவர். கருணாநிதியின் பிறந்தநாளுக்கு நான் செலுத்தக்கூடிய மரியாதையாக இந்த நிகழ்வில் பங்கு பெற்றதை கருதுகிறேன். கவிதை ஒருவர் எழுதிவிட்டால் அது அவருக்கு சொந்தமல்ல. இது வாசகர்களுக்கு சொந்தமாக இருக்கும் வகையில் மாறிவிடுகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'கலைஞர் எழுதுகோல் விருது' பெறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்!