தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், அத்தொகுதியின் வாக்காளர் சந்தானகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இதில் தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக தேர்தல் வழக்கை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துராமலிங்கம் நடத்த அனுமதியளிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தானகுமார் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் முத்துராமலிங்கம் தாக்கல்செய்த மற்றொரு வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தனக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை யாருக்கு, எங்கு பணம் கொடுக்கப்பட்டது என்பதை வழக்குத் தொடர்ந்தவர் மனுவில் தெரிவிக்கவில்லை என்றும், தன்னுடைய வேட்புமனு குறைபாட்டுடன் இருப்பதற்கான ஆதாரத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முறையான வருமான வரி செலுத்திவருவதாகவும், கணவருக்கு வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) இல்லை என்பதையும் முழு விவரங்களுடம் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதால், முத்துராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கனிமொழியின் மனுவுக்கு முத்துராமலிங்கம், தேர்தல் ஆணையம், தூத்துக்குடி தேர்தல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் முதல் வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: கனிமொழி தலைமையில் சாலை மறியல் - கோவில்பட்டியில் பரபரப்பு