தமிழ்நாட்டில் சிறந்த தலைவருடைய ஆட்சி எது என கேட்டால் அனைவரது மனதும் ஒருவரைத்தான் நினைக்கும. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் கிங் மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர், படிக்காத மேதை காமராஜரைத்தான். தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் , ‘பெருந்தலைவர் காமராஜர். இவர் ஒன்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்தார். இவருடைய காலம், தமிழ்நாட்டின் பொற்காலம். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெருந்லைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்த அவரின் தன்னலமற்ற தொண்டுக்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976ஆம் ஆண்டு அவருக்கு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங் மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
காமராஜர் , 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி, விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும், சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாட்சி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்றுதான் அழைப்பார். அதுவே, பின்னர் (காமாட்சி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது. காமராஜர், தனது ஆரம்பக் கல்வியை தனது ஊரில் 1908ஆம் ஆண்டில் தொடர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும்போது, அவருடைய தந்தை இறந்ததால், தன்னுடைய பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் , தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்நாட்களில் டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920ஆம் ஆண்டில் தனது 16ஆவது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்கிரகத்தின் ஒரு பகுதியாக, 1930ஆம் ஆண்டு, சி.ராஜ கோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த பேரணியில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாகிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர், சென்னையில், ‘வாள் சத்தியாகிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்கு தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.
‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தியை தன்னுடைய அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். 1936ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றபோது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்தியமூர்த்தி இறந்துவிட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை காமராஜர் ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி தன்னுடைய சேவையைத் தொடர்ந்தார்.
1953ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் அவருக்கு மதிப்பு குறைந்தது. இதனால், ராஜாஜி பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார். காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும், அனைவரும் வியக்கும்படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சர்களாக்கினார்.
முதலமைச்சரான பிறகு, தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக் கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்தார். மேலும், 17,000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், பள்ளிக் குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாக அமைந்தது. இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் 7 விழுக்காடாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 விழுக்காடாக உயர்ந்தது.