எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கடந்த 3 நாட்களாக தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், " நானும் ரஜினியும் பல ஆண்டு நண்பர்கள். அரசியல் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் வெளியிட்ட அறிக்கை எனக்கு முன்பே தெரியும். அரசியலைவிட அவரது உடல் நலம்தான் முக்கியம். என் கட்சிக்காக நண்பர் ரஜினியிடம் நான் ஆதரவு கேட்டேன்.
சென்ற ஆண்டு தேர்தல் வாக்கு அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் நாங்கள் தான் 3 ஆவது பெரிய கட்சி. ஓராண்டில் 1 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர். சகாயம் ஐஏஎஸ் போன்றவர்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் வரவேற்போம். அடுத்த ஆண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக சட்டப்பேரவையில் ஒலிக்கும். நடைமுறையில் இல்லாத மனுநூல் குறித்து பேச வேண்டியதில்லை. வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு நன்றி.
வேலையின்மை, குடிநீர் பிரச்சனைகள் குறித்து நாம் முதலில் பேச வேண்டும். 2 நாள் மழைக்கே சென்னை தெப்பக்குளம் ஆகி விட்டது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது. ஆயுள் தண்டனை 14 ஆண்டுகள் தான், அதனை 7 பேரும் முடித்து விட்டார்கள். எனவே, அவர்களின் விடுதலை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்றார்.