இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரவலான பரிசோதனை என்பதை தொடக்கத்தில் இருந்தே மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி வருகின்றது.
அதை செய்யாததால் தான் சென்னையில் மட்டும் கரோனா இருப்பது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு, அதிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில், மக்கள் குடும்பம் குடும்பமாக சென்னையிலுருந்து வெளியேறியது ஜூன் மாதம் முழுவதும் நடந்தது.
தற்போது பிற மாவட்டங்களிலும் பெருகும் தொற்று அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டிருப்பதை காண்பிக்கின்றது என தெரிவித்துள்ளார். மேலும் கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவரின் அனுமதிசீட்டிற்காக காத்திருக்காமல் நேரடியாக ஆய்வகங்களை அணுகலாம் என அறிவிக்க வேண்டும்.
இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க முடியும். அதே போன்று அணைத்து ஆய்வகங்களில் பரிசோதனை உபகரணங்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்டமாக கரோனா பரிசோதனையை நேரடியாக வீட்டிற்குச் சென்று செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். இந்த பரிசோதனை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் பரிசோதனை கட்டணம் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என கமல் ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.