மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மழை ஆரம்பித்து விட்டது. புயல் சின்னங்கள் நிலைகொள்ளும். மீண்டும் முன்பே நாம் எதிர்கொண்ட பிரச்னைகள் செய்திகளாகும். சுனாமி, பெருமழை, பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் முதலில் பாதிக்கப்படுவது மீனவச் சமுதாயமே. ஒவ்வொரு பேரிடரின்போதும் படகுகள் காணாமல் போவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
தற்போது பருவமழை தொடங்கியுள்ள சூழலில், மீண்டும் ஒரு புயல் காண சூழல் உருவாகலாம். எனவே அரசு கடந்த காலங்களில் செய்த அலட்சியப் போக்கைக் கைவிட்டு, ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதன்படி, ரேடியோ தொலைபேசி மூலம் மீனவர்களுக்குத் தகவல்களைத் தருவது, மிதவைக் கவசம் வழங்குவது, தொலைத்தொடர்பு மையம் அமைப்பது, கடல் ஆம்புலன்ஸ் தயாராக வைத்துக்கொள்வது போன்றவை மூலம் அவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தடுக்க முடியும்.