சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதிகேட்டு அவரது தாய் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகின்றார். அதனை தொடர்ந்து, மாணவியின் தாயார் செல்வி மற்றும் தந்தை ராமலிங்கம் ஆகியோர் இன்று (செப். 5) சென்னை டிஜிபி அலுவலகத்தில் யூ-ட்யூபர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில்,'The K tv' எனும் பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், தனது யூ-ட்யூப் சேனலில் தனது மகள் குறித்தும், தன்னைப்பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார். மேலும், அந்த நபர் தனது மகள் 9ஆவது படிக்கும் வரை இன்சியல் 'G' என இருந்ததாகவும், பின்னர் தான் ராமலிங்கத்தை திருமணம் செய்து கொண்ட பிறகு கள்ளக்குறிச்சி மாணவியின் இன்சியல் 'R' எனப் போட்டு கொண்டதாகவும் அவதூறு பரப்பி வருகிறார்.
பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு தன்னைப்பற்றி அபாண்டமாகப்பேசி வரும் கார்த்திக், கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தையை நான் கொலை செய்திருக்கலாம் என்றும் பேசும் வீடியோவால் மகளை இழந்து வாடும் தங்களுக்கு மன உளைச்சலாக உள்ளது' என கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி,"என்னைப் பற்றியும், எனது மகள் பற்றியும் அவதூறாகப் பேசிவரும் யூ-ட்யூபர் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். மகள் குறித்து தவறாகப் பேசுவதுடன் அவர் என் மகளே அல்ல என பேசுவது மன வேதனை அளிக்கிறது" என்றார்.