டெல்லி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழுவை நியமித்தது. மறு பிரேத பரிசோதனையின் போது தந்தை உடனிருக்கலாம் எனவும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் மூன்று மருத்துவர்களுடன் தங்கள் தரப்பு மருத்துவர் உடனிருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் பிரேத பரிசோதனையின் போது வழக்கறிஞருடன் தந்தை கலந்துகொள்ள அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து மாணவியின் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் மறு பிரேத பரிசோதனை செய்ய தடை இல்லை என்று தெரிவித்தனர்.