சென்னை:கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டு பள்ளியில் இருந்த கல்வி சான்றிதழ்கள், வாகனங்களுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்தனர். வன்முறையாளர்களின் தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் காயமடைந்தனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர சமூக வலைதளங்கள் மூலமாக வன்முறை தூண்டும் வகையில் வதந்தி பரப்பியதற்காக இதுவரை 10க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வாட்ஸ் குழு அமைத்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக சென்னையை சேர்ந்த 4 மாணவர்களை அண்ணாசாலை மற்றும் திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரம் - மெரினாவில் போலீஸ் குவிப்பு இவ்விவகாரம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் சிலர் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதும், மாணவர் இயக்கம் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் விவேகானந்தர் இல்லம் முதல் கண்ணகி சிலை வரை 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மெரினா கடற்கரை முழுவதும் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாகவும், வாகன தணிக்கையை பலப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் குழு மூலமாக தவறாக வதந்தியை பரப்பி வன்முறை தூண்டும் வகையில் செயல்படுவோரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இது போன்ற தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலமைச்சர் கான்வாய் வரும்போது அவரை நிறுத்தி, அவரிடம் முறையிடவும் முடிவு செய்ததுள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவல்களால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே சுமார் 2500 பேர் இன்று கூட உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரப்பியதாக நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி விவகாரம்: 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்