தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய காரணம் என்ன...சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மாணவி மரண வழக்கு
மாணவி மரண வழக்கு

By

Published : Aug 24, 2022, 12:39 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ஆம் தேதி மரணமடைந்தார்.

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு சிபிசிஐடி காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், பள்ளி தொடர்பான சிசிடிவிகளின் பதிவு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், 38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், மேலும் காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்கள் தரப்பில் மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்றும், மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, இந்த வழக்குகளில் காவல்துறை நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஆகஸ்ட்.26) நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:நீங்கள் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள்... திமுகவை சாடிய உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details