அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகிய 3 பேரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி எழுந்த புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க கோரி சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
சசிகலாவிற்கு எப்போதும் ஆதரவு - எம்.எல்.ஏ பிரபு
சென்னை: எப்போதும் சசிகலாவிற்கு ஆதரவாகவே செயல்படுவேன் என்று அதிமுக எம்.எல்.ஏ பிரபு ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சபாநாயகரின் நோட்டீஸிற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் பொருந்துமா என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, நேற்று சட்டப்பேரவைக்கு சென்று சபாநாயகரின் நோட்டீஸிற்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்டார். அதைத் தொடர்ந்து அவர் இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரின் மனுவுடன் தனது மனுவையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ பிரபு ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் கேட்ட போது, அவர்கள் முரண்பாடான தகவல்கள் அளித்தனர். அதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளேன். மேலும், அதிமுக எம்எல்ஏவாக உள்ளதால் சட்டப்பேரவையில் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவேன். அதேசமயத்தில் கட்சியின் ஒரு அங்கமாக இருக்கும் சசிகலாவிற்கு ஆதரவாகவும் நான் செயல்படுவேன் என்று அவர் தெரிவித்தார்.