”எழுந்து வா எழுந்து வா தலைவா”... லட்சக்கணக்கானோர் காவேரி மருத்துவமனைக்கு முன்பு நின்று கொண்டு எழுப்பிய இந்த முழக்கங்கள் என்றும் ஓயாது. தன் மனதுக்குள் சிம்மாசனம் போட்டு 50 வருடங்களுக்கும் மேலாக அமர்ந்திருந்த தலைவர் மருத்துவமனைக்குள் படுத்த படுக்கையாக இருக்கும்போது தொண்டர்கள் எழுப்பிய இந்த முழக்கங்கள் அனைவரையும் மிரள வைத்தது.
வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது தொண்டர்கள் இப்படி முழக்கங்கள் எழுப்பினர் சரி. ஆனால், அவர் உயிரிழந்த பிறகு ராஜாஜி ஹாலிலும், மெரினாவிலும் தொண்டர்களால் எப்படி இப்படி முழக்கங்களை எழுப்ப முடிகிறது என்று கேட்டால் அதற்கு ஒன்றே ஒன்றுதான் பதில், அதுதான் கருணாநிதி. ஏனெனில் அவர் உற்சாகம் இழக்காமல் கடைசிவரை தன்னையும் தன் தொண்டர்களையும் ஆக்டிவ்வாக வைத்துக்கொண்டார்.
உயிரிழந்தவரால் எழுந்து வர முடியாதுதான் இயற்கையில் அது சாத்தியமில்லைதான். ஆனால் அனைத்தையும் வென்ற தங்கள் தலைவரால் இந்த இயற்கையையும் வெல்ல முடியும் என தொண்டர்கள் நம்பினார்கள். அது சாதாரண விஷயமில்லை. அதற்கு காரணம் அசாத்தியம் என்ற வார்த்தைக்கு வாழ்ந்த காலம் வரை அவருக்கு அர்த்தம் என்பதே தெரியாது. எல்லாம் சாத்தியம்தான் என தனது சில பவுண்ட்ஸ் மூளையாலும், தன் பேனாவாலும் இந்திய அரசியல் அரங்குக்கு அவர் உரக்க சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஆழ்வார்ப்பேட்டை காவேரியில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி கர்நாடக காவிரி ஆற்றோரம் அனுமதிக்கப்பட்டிருந்தால் உடன் பிறப்புகளின் முழக்கங்களைக் கேட்டு எந்த வித பிரச்னையும் செய்யாமல் காவிரி முழுதாக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். மெரினாவில் புதைக்கப்படும் இறுதி நிமிடங்களில்கூட ”எழுந்து வா தலைவா” என்ற குரலை உடன்பிறப்புகள் குறைக்கவே இல்லை. வங்கக்கடல் அலைகள் அன்று எழுந்து நின்று கைத்தட்டிக் கொண்டிருந்தன.
கருணாநிதி சந்திக்காத ஏற்றங்கள் இல்லை இறக்கங்கள் இல்லை. ஆனால் ஏற்றத்தை அவர் தனது தலையில் ஏற்றியது இல்லை இறக்கங்களின்போது அவர் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. சொல்லப்போனால் ஏற்றங்களைவிட இறக்கங்களில்தான் கருணாநிதி சுகம் கண்டவர். தனது ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட. “அப்பாடா ஒரு சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது” என்று சொல்லி கோபாலபுரத்துக்குள் எந்த விதமான சஞ்சலமும் இல்லாமல் நுழைந்தவர் அவர். கலைஞருக்கு கோபாலபுரத்துக்குள் நுழைவதும் ஒன்றுதான், கோட்டைக்குள் நுழைவதும் ஒன்றுதான், குடிசைக்குள் நுழைவதும் ஒன்றுதான். எங்கு நுழைந்தாலும் அங்கு புது பாதையை போட்டுவிட்டே நுழைவார். அந்த பாதை அவருக்கானது இல்லை அவரின் பின்னால் வருபவர்களுக்காக.
கருணாநிதி ஏராளமான வெற்றிகள் கண்டவர். ஆனால் அவரது ஒரு வெற்றி அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவர் அரசியலில் ஆக்டிவ்வாக இயங்கியபோது அவர் போல் எவரும் வசை சொற்கள் வாங்கியிருக்க முடியாது. அப்போதைய கால்நடை தலைமுறை தொடங்கி தற்போதைய இணைய நடை தலைமுறைவரை அவர் மேல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவர் உடல் நலிவுற்று படுக்கையில் விழுந்தபோது இணைய தலைமுறையினரே கருணாநிதி மீண்டும் வரவேண்டும் என எண்ணினர். தன்னை தூற்றியவர்களையும் இறுதிக் காலங்களில் தேட வைத்த அவரது அந்த வெற்றி யாருக்கேனும் வாய்க்குமா என்றால் பதில் இல்லை.
அவரைப்பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான்; ஓட வேண்டும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அரசியலில் ஒருவர் வனவாசம் அனுபவித்தார் என்றால் அவருக்கு அரசியல் முடிவுரை எழுதிவிட்டதென்று அர்த்தம். ஆனால், கருணாநிதி 13 வருடங்கள் ஆட்சியில் இல்லாதபோது அதை முடிவாக பார்க்காமல் தனக்கு கிடைத்த ஓய்வாக பார்த்தார். அந்த ஓய்வு என்பது ஆட்சிக் கட்டிலுக்கு மட்டும்தானே ஒழிய கட்சி கட்டிலுக்கு இல்லை. அந்தக் காலக்கட்டத்தில்தான் கருணாநிதி தீவிர பாய்ச்சல் செலுத்தினார். அந்தக் காலக்கட்டத்தில் அவரது கால்கள் பயணப்படாத கிராமங்கள் இல்லை. அவரது குரல் ஒலிக்காத மேடைகள் இல்லை. தொண்டர்களை உற்சாகப்படுத்தியே வைத்திருந்தார். அந்த உற்சாகம்தான் காவேரி மருத்துவமனையிலும், மெரினாவிலும் எதிரொலித்தது.
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், இந்தியாவின் அரசியல் சூழலும் ஐசியூவில் இருக்கின்றன. அதனால்தான் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி மீண்டும் வரவேண்டும் என முதியோர்கள் முதல் இளைஞர்கள்வரை பேசிக்கொண்டே இருந்தனர். திமுக திண்ணையில் வளர்ந்தபோதும், இணையத்தில் வளர்ந்த போதும் தன்னை அங்கு நிலைநிறுத்தி அரசியல் செய்தார்.
சமூக வலைதளத்தில் அவர் கணக்கு தொடங்கியபோது, கருணாநிதியின் புதுப்புது அரசியல் கணக்குகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைவரும் திணறினர். ஏராளமான திட்டங்களுக்கு விதை போட்ட கருணாநிதிதான் இன்று தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திட்டத்திற்கும் விதை போட்டவர். அவர் சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் தொடங்கியது முதல் ஆச்சரியம் என்றால் நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு சளைக்காமல் பதிலளித்தது முதல் அதிசயம்.