சென்னை: கச்சத்தீவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை முதல் தனுஷ்கோடி வரை நேற்றுமுதல் (செப்டம்பர் 3) வரும் 27ஆம் தேதி வரை விழிப்புணர்வு நடைபயணம் செல்வதற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமு மணிவண்ணன் திட்டமிட்டிருந்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலையில் தமிழ்நாட்டு பாதுகாப்பு, தமிழ்நாட்டு மீனவர்கள் நலன், இந்தியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபயணத்தைத் தொடங்கினார் ராமு மணிவண்ணன். சிறிது நேரத்திலேயே காவல் துறை அனுமதி இல்லை எனத் தடுத்துவிட்டது.
இந்திய இறையாண்மைக்கு ஆபத்து
இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய அவர், "கச்சத்தீவு வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழர் நிலம், தமிழ்நாட்டு நிலப்பரப்பிற்கும், இந்திய இறையாண்மைக்கும் உள்பட்ட பகுதியாகும்.
1974ஆம் ஆண்டு இந்திய அரசு, இலங்கை அரசுக்கு நாடாளுமன்றம் அங்கீகரிக்கப்படாத ஒப்பந்தம் மூலம் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு, பாதுகாப்பற்றச் சூழலும், வாழ்வாதார இன்னல்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனாவின் ஊடுருவல், ராணுவ கட்டுமானங்கள் காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும், இந்திய இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
சட்டப்பேரவையில் தீர்மானம்
இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசு இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதோடு, தமிழர் நலம், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு, இந்திய நாட்டின் இறையாண்மை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் வைக்க வேண்டும். கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை உடனடியாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராம மணிவண்ணன் பேட்டி மேலும் மாநில அரசின் ஒப்புதல் இன்றியும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியும் அன்றைய இந்திய அரசு தன்னிச்சையாக இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்தது. அது அரசியல் சாசனத்திற்கு முரணானது.
இதனால் பெரிதும் வாழ்வாதார பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்துவருகின்றனர் என்பதால், அரசியல் சாசனத்திற்கு உள்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும். இதற்காக, இந்த விழிப்புணர்வு நடைபயணத்தைத் திட்டமிட்டபடி சட்டரீதியாக அனுமதி பெற்று விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.