சென்னை:திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (அக். 31) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் நாளும் வளர்ந்தோங்கி வரலாறு படைக்கின்றன.
முன்பு, சட்டப்பேரவையில் 110ஆவது விதியின்கீழ் அவர் அறிவித்தபடி 'அரசுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளில் ஒன்றான - அரசு ஊழியர் பணி நிறைவடைந்து ஓய்வு பெறும் நாளில், அவர்மீது ஏதாவது ஒரு காரணம் - குற்றச்சாட்டு கூறி, கடைசி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து, அவரது ஓய்வூதியம் போன்ற ஓய்வு காலப் பலன்களைக் கிட்டாமல் செய்யும் மனிதாபிமானமற்ற, கருணையற்ற செயல்முறை இனி இருக்காது' என்றார். அந்த அறிவிப்பிற்கு தற்போது அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது மிக மிகப் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய சிறந்த ஓர் அறிவிப்பாகும்.
அரசு இயந்திரத்தின் அச்சாணி
அரசுப் பணியாளர்கள்தான் அரசு இயந்திரத்தின் அச்சாணி. அந்த உருள் பெரிய தேருக்கான அச்சாணி பல ஆண்டுகள் உழைத்து இறுதியில் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் இப்படி ஓர் அதிர்ச்சி அறிவிப்புதான் அவருக்குப் பரிசு என்றால் அவரும், அவர் குடும்பமும் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்து, பிறிதின் நோய்ப் போக்கும் ஆட்சியாக தமது ஆட்சியை நடத்தி இன்றைய முதலமைச்சர் நாளும் உயருகிறார்.
மவுனப் புரட்சி
திராவிட மாடல் ஆட்சி முன்பு கருணாநிதி தலைமையில் நடந்தபோது 1972ஆம் வாக்கில் என்ற ரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்து வரலாறு படைத்தது போன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இன்றைய மனிதநேயம் மிக்க ஆட்சி - இந்த மவுனப் புரட்சியை செய்துள்ளது.
இதனால், சுமார் 5 லட்சம் அரசுப் பணியாளர்களும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த பயனடைவர். நிம்மதிப் பெருமூச்சு விடுவர் என்பது உறுதி. இதனால் தவறு செய்பவர்கள், லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள் ‘வாங்கிப் பழகிய கையர்கள்’ காப்பாற்றப்படுவார்கள்; அல்லது காப்பாற்றப்பட வேண்டும் என்பதல்ல பொருள்.
எந்த சமரசமும் தேவையில்லை
குற்றங்களை அவ்வப்போது காலந் தாழ்த்தாது கண்டறிந்து, நிரூபணம் ஆனால், உரிய நீதி வழங்குவதில் எந்த சமரசமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை; கடைசி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து அதிர்ச்சியைத் தருவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய உட்கருத்தாகும்.
இன்னமும் ஆட்சி இயந்திரத்தில் நிலவும் பழைய பாணி நடைமுறை கைநீட்டலும், காரியங்களைச் செய்து முடித்திட கையூட்டு எதிர்பார்ப்பதும் தவிர்க்கப்படுவதோடு, முந்தைய திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள்படி கால தாமதம் இன்றி கோப்புகள் பைசல் செய்யப்படுவதும், காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்டத்துறை அலுவலர்கள் தக்க பதில் அளிப்பதோடு, உரிய திருப்திகரமான விளக்கம் தரவில்லை என்றால், உரிய தண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்ட திட்டங்களும் திருத்தி அமைக்கப்பட்டால், அதன் மூலம் பலதுறைகளிலும் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும்; சிவப்பு நாடா முறை, தானே மறைந்து விடமுடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தியை புறக்கணித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்... மற்றொரு பிளவை நோக்கி நகர்கிறதா அதிமுக?