அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு முன்பாக, பதிவாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட 6 அதிகாரிகள் இன்று புகார்கள் தொடர்பான ஆணங்களை நேரில் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த ஆவணங்கள் அனைத்தையும் விசாரணை குழுவினர் சரி பார்த்தனர். இதையடுத்து பேசிய நீதிபதி கலையரசன், ” அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என அதன் பதிவாளருக்கு கடிதம் எழுதினோம்.
ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவருக்கு சம்மன் அனுப்பியதன்பேரில் இன்று குழுவின் முன் அவர் நேரில் முன்னிலையானார். அப்போது சில ஆவணங்களையும் அவர்கள் அளித்தனர். சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை, இன்னும் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். 2018 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட பின், புதிய நியமனங்கள், உபகரணங்கள் வாங்கப்பட்டது, பண பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் ஆவணங்களை நாளையும், இந்த வார இறுதியிலும் தாக்கல் செய்ய பதிவாளருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
பணி நியமனங்களில் சட்டம், விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரிப்பார்கள் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சூரப்பா விவகாரம்! - அண்ணா பல்கலை. பதிவாளரிடம் விசாரணை!