சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றபிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா, டிடிவி தினகரனை கட்சியின் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்து 2016 டிசம்பர் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை: சசிகலாவின் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் விசாரணை சென்னை நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.