தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான வழக்கு...ஆக 22ஆம் தேதி தீர்ப்பு

அனைத்து சமுதாயத்தினரையும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய அரசு அறிவித்த புதிய விதிகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக.22ம் தேதி தீர்ப்பளிக்கிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 20, 2022, 7:53 PM IST

சென்னை: தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை புதிய பணி விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, தனி நபர்கள் உட்பட அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச்சகர்கள் நியமனம், இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என 2021 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு இன்று (ஆக.20) விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில்களுக்கு பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அர்ச்சகர்களை அரசே நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை தரப்பில், கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி, கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது... மணிசங்கர் அய்யர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details