சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருப்பவர் திருநெல்வேலி சுப்பையா சிவஞானம். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்ற பின்னர், 2011ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவரை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அண்மையில் மத்திய அரசுக்கு மூலமாக குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து நீதிபதி சிவஞானத்தை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய சட்டத்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து டி.எஸ். சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விரைவில் பதவி ஏற்கவுள்ளார். நீதிபதி சிவஞானம் பல முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடல், சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை, தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி செல்லும் போன்ற முக்கிய தீர்ப்புகளை அளித்துள்ளார்.
தனியார் பள்ளி பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து தாம்பரத்தில் மாணவி சுருதி இறந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, தனியார் பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டவர்.
தமிழ்நாட்டில் கனிம வளங்களையும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்தவர் நீதிபதி டி.எஸ்.சிவஞானம். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் சிவஞானத்தின் பணியிட மாற்றத்திற்கு பிறகு 55 நீதிபதிகள் மட்டுமே இருப்பார்கள். இதன்மூலம் காலிப்பணியிடம் 20 ஆக உயர்கிறது.
இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்கு அரசு வேலை!