2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது நீதிபதி கர்ணன் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குபதிவுசெய்து, நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராகாததால், நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தன் முன்பு, ஆஜராக கர்ணன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் கர்ணனுக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து கர்ணன் கொல்கத்தா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலையானார். அதன்பிறகு அவர் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, ”ஊழலுக்கு எதிரான செயலாக்க கட்சி” என்ற கட்சியை தொடங்கினார்.