சென்னை : சென்னையில் வசித்து வரும் திருநங்கைகள், வேலையின்றி தவித்து வருவதால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திருநங்கைகளுக்கு சென்னை காவல் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இணை ஆணையர் சுதாகர், சூளைமேடு ஆய்வாளர் ஆனந்த்பாபு கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதனடிப்படையில், திருநங்கைகளுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கி வரும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் துறையினர் இணைந்து கம்ப்யூட்டர், லேப்டாப், உணவகம் வைத்து சுய தொழில் செய்யவதற்காக பாத்திரங்கள், எரிவாயு அடுப்பு, தள்ளுவண்டிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.
பின்னர் மேடையில் பேசிய இணை ஆணையர், 'கிழக்கு மண்டலத்தில் வசித்து வரும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை காவல் துறையினர் அளித்து வருகின்றனர். திருநங்கைகளை கண்டவுடனே சிலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். அதனை மாற்றும் நோக்கில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். திருநங்கைகள், காவல் துறையினர் இருவருக்குமிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இணைந்து செயல்படுவதாகவும், திருநங்கைகள் சொந்தமாக விடுதி, உணவகங்கள் நடத்தி வருவது வரவேற்புக்குரியது' என அவர் கூறினார்.
இதையும் படிங்க:மகளிர் சிறைத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு பேரணி!