சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை வாலஜா சாலையிலிருந்து மெரினா நினைவிடம் வரை அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
முன்னதாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கட்சி நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏகள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலா அஞ்சலி
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சசிகலா, 2016 டிசம்பர் 5ஆம் தேதி, ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார். இதன்பின்னர், 2017 பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்தில் முன் சத்தியம் செய்து சசிகலா சபதம் எடுத்தார். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ஹரகாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் முதன்முறையாக அக்டோபர் 16ஆம் தேதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். விரைவில் சசிகலா தனது கட்ட நகர்வு குறித்து முடிவினை அறிவிப்பார் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவு நாள்: நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ், ஓபிஎஸ்