சென்னை:சென்னை தேனாம்பேட்டை அபிபுல்லா சாலையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவ்வலரிக்குச் சொந்தமான கார்ப்பரேட் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் சிங் என்பவர் ஜனவரி 23ஆம் தேதி நகைகளை வைக்கும் இரும்பு பெட்டகத்திலிருந்து 5 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்றார்.
இதுகுறித்து மேலாளர் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரவீன் சிங்கை பிடிக்க தனிப்படை அமைத்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு விரைந்தனர். மேலும், அவரது கைப்பேசி எண்ணை வைத்து காவல் துறையினர் தேடியபோது ஒருவித துப்பும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே பிரவீன் சிங் திருடிய நகைகளில் 450 கிராம் தங்கத்தை விற்ற சவுகார்பேட்டையைச் சேர்ந்த விக்ரம், பிந்துமண்டல், சவுதம் மன்னா, புபாய் மண்டல் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மூன்று மாதங்களாக தலைமறைவாகிய பிரவீன் சிங்கை பிடிக்க ராஜஸ்தானில் தனிப்படை காவல் துறையினர் முகாமிட்டு தேடிவருகின்றனர்.
இந்நிலையில் நகை திருடிக்கொண்டு ராஜஸ்தானிற்கு சென்றபோது பிரவீன் சிங்குக்கு உதவியதாக சிரோகி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (20) என்பவரை பிடித்து சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி அனுப்பி விட்டனர்.