சென்னை: கடந்த 11ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே அதிமுக தலைமை அலுவலகம் கைப்பற்றுவது தொடர்பாக மோதல் நடைபெற்றது. இந்த கலவரத்தில் காவலர்கள் மற்றும் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 14 நபர்கள் கைது செய்யப்பட்டு 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைதொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திருடிச் சென்றுவிட்டதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
'ரெக்கார்ட் டான்ஸ் ஆடி அவமரியாதை': ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர், ஈபிஎஸ் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் மீது புகார் ஒன்றை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று (ஜூலை 25) அளித்தார். அந்த புகாரில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ரெக்கார்ட் டான்ஸ் ஆடி மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும், அதுகுறித்து மேலாளர் மகாலிங்கத்திடம் கேட்டதற்கு மரியாதை குறைவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கடந்த 11ஆம் தேதி ஓபிஎஸ், புகழேந்தி உட்பட பலர் வழக்கமாக கட்சிப் பணியாற்றிட தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களுடன் சென்றபோது ஈபிஎஸ் தூண்டுதலின் பேரில் தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் வி.என். ரவி, எம்.கே. அசோக், ஆதி ராஜாராம் ஆகியோர் குண்டர்களுடன் கத்தி, கற்கள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தலைமை அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் தங்களை சரமாரியாக தாக்கினர்.