சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகர் கள்ள ஓட்டு போட்டதாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அவரது ஆதரவாளர்களும் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். . இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.
பின்னர், அந்த நபரை கைது செய்ய கோரி ஜெயக்குமாரும், அவரது ஆதரவாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, திமுக பிரமுகரை தாக்கியதாக வந்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமார் மீது எட்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குழந்தைகள் முன் கைது
பின்னர், முறையான அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக ஜெயக்குமார் உட்பட 110 பேர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரண்டு வழக்குககளில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெயக்குமாருக்கு முதலில் பிணை மறுக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது வழக்கில் அவருக்கு நேற்று (பிப். 24) பிணை வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அவர் தற்போது பூந்தமல்லி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜெயவர்த்தன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த புகார் மனுவில், " பிப். 21ஆம் தேதி இரவில் குழந்தைகள், பெண்கள் இருக்கும் நேரத்தில், சட்டவிரோதமாக தங்கள் வீட்டுக்குள் நுழைந்த காவல் துறையினர், எந்த காரணத்தையும் கூறாமல் தந்தையை கைது செய்தனர்.