சென்னை: இதுகுறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி அளித்த சிறப்பு பேட்டியில் , "சிபிஎஸ்இ கல்வி வாரியம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை எழுதிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓராண்டு வீணாகும்
இந்தத் தேர்வினை எழுதி, பெறும் மதிப்பெண்களால் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் சிறந்தக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
இதனால் ஓராண்டு வீணாக வாய்ப்புள்ளது. மாணவர்கள் ஓராண்டை வீணடிப்பதால், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
யார் எழுதலாம்?
ஆனால், 10, 11ஆம் வகுப்பில் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக எடுத்த மாணவர்களும், தங்கள் மதிப்பெண்ணுக்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்காது என கருதும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.
மாணவர் சேர்க்கையில் மறுசீரமைப்பு
ஜெயகிருஷ்ணன் காந்தி சிறப்பு பேட்டி சிபிஎஸ்இ மாணவர்களுக்கான விருப்பத் தேர்வினை எத்தனை மாணவர்கள் எழுத விரும்புகின்றனர் என்பதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் உடனடியாக கணக்கெடுத்து, ஆன்லைன் மூலம் விரைவில் தேர்வு நடத்த வேண்டும்.
அப்போதுதான் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டிலையே பல கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வாய்ப்பைப் பெறமுடியும்.
மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய அளவில் ஒரு குறிப்பிட்ட காலத்தினை நிர்ணயம் செய்து, அதை ஏன் கடுமையாக ஒன்றிய அரசு அமல்படுத்தக்கூடாது. இந்திய அளவில் மாணவர் சேர்க்கை முறையில் மறு சீரமைப்பு கொண்டு வரவேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: மாற்றுச் சான்றிதழ் வழங்க கட்டணம் வசூலிக்க கூடாது!