மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து அவரது உறவினர்களான ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும், விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இதன் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷாயி (Justice N. Seshasayee) இன்று வழங்கியுள்ளார்.
அதன்படி, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி அரசு பிறப்பத்த சட்டம் செல்லாது. மூன்று வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாரிசுகள் தரப்பு வாதம்
ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை.
வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்தும், வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.