ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான வழக்கில், ஏற்கனவே அளித்திருந்த இரண்டாம் நிலை வாரிசுகள் என்ற தீர்ப்பில் இன்று திருத்தம் செய்த சென்னை உயர் நீதிமன்றம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரே நேரடி வாரிசுகள் என தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தியாகராய நகர் இல்லத்தில் தீபா மற்றும் தீபக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய ஜெ.தீபா, ”நாங்களே இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுக அரசு என் மீது வீண் பழி சுமத்தி வருகிறது. இது எதிர்பார்த்த ஒன்று தான். எது நடந்தாலும் சந்திக்க தயாராகவே உள்ளோம்.
எங்களுக்கு அரசால் அச்சுறுத்தல் இருப்பதால், ஆளுநரிடம் பாதுகாப்பு கேட்க உள்ளேன். போயஸ் சாலைக்குக் கூட என்னை போக அனுமதிக்காமல் இருப்பது நியாயமற்றது. அதிகார பலத்தை வைத்துக் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அதிமுகவினர் இந்தத் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என்று கூறினார்.
ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்ற தீர்ப்பை நானே எதிர்பார்க்கவில்லை - ஜெ.தீபா தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தீபா, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா இல்லையா என, தர்ணா நடத்திய ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் கேட்க வேண்டும் என்றார். ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விசாரணைக்கு நான் சென்றேன், ஏன் அதிமுகவினர் யாரும் செல்லவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்கள், மரணத்திற்கு பின்னரும் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி வருவதாகவும் ஜெ. தீபா குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் - அதிமுக ஐடி பிரிவு