தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேதா நிலையம்: அரசுக்கு வட்டியுடன் வந்த டெபாசிட் தொகை! - வேதா நிலையம் நினைவு இல்லம் வழக்கு வரலாறு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்காக, அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகை, நீதிமன்ற உத்தரவையடுத்து வட்டியுடன் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

வேதா இல்லம்
வேதா இல்லம்

By

Published : Mar 16, 2022, 10:48 PM IST

Updated : Mar 17, 2022, 8:22 AM IST

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த, வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

போயஸ் தோட்டம் இல்லத்தை அரசுடைமையாக்குவதற்காக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 68 கோடி ரூபாயை, கடந்த 2020ஆம் ஆண்டு டெபாசிட் செய்திருந்தது.

இதையடுத்து, ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், மற்றொரு வழக்கில் வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும், அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், அதிமுக முன்னாள் சட்ட அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற உத்தரவு

இதைத்தொடர்ந்து, வேதா இல்லம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் சென்னை பெருநகர 6ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘வேதா நிலையம் இல்லத்துக்காக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் செலுத்தியிருந்த 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்பப்பெறவும், இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் இந்த வழக்கு 6ஆவது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எஸ்.ஷாஜகான் ஆஜராகி வைப்புத் தொகை ரூ. 68 கோடியை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். அதையடுத்து நீதிபதி அந்தத் தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்த உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நீதிமன்ற பதிவாளர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த தொகை வட்டியுடன் சேர்த்து மொத்தம் 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ரூபாயாக தென் சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹிஜாப் தடை: 'அம்பேத்கர் இருந்திருந்தால் கண் கலங்கியிருப்பார்'!

Last Updated : Mar 17, 2022, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details