சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டத்தொடரில் இன்று (அக். 18) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05.12.16, அன்று இரவு 11:30 மணி என மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா இறந்த நேரம் குறித்து முரண்.. - ஜெயலலிதா இறந்த தேதியில் வேறுபாடு
ஜெயலலிதா உயிரிழந்தது டிசம்பர் 5ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் அவர் டிசம்பர் 4ம் தேதியே உயிரிழந்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது.
மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவின் இறுதி நேரத்தில் அவரை கவனித்துக்கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இந்த நேரத்திற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது. 04.12.16 அன்று பிற்பகல் 3:50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயதில் செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்களின் தெளிவான சாட்சியங்களாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் - சபாநாயகர் அப்பாவு