தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேதா நிலையம் விவகாரம்: தீபக் மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்க பரிந்துரை! - வேதா இல்லம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையைக் கைவிட்டு, இல்லத்தின் சாவியைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தீபக் தொடர்ந்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்துப் பட்டியலிடும்படி, தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 16, 2020, 5:26 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளைக் கைவிட்டு, இல்லத்தின் சாவியைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு தீபக் மனு

வேதா நிலையம் வீடு, தனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டு, தனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் எழுதி வைத்திருந்தார் என்றும், அந்த இல்லத்தைக் கோயில் போல பயன்படுத்திய ஜெயலலிதா, முக்கியக் குடும்ப நிகழ்ச்சிகளை அந்த வீட்டிலேயே நடத்தியதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என எந்தக் கட்டத்திலும் ஜெயலலிதா தெரிவித்ததில்லை எனக் கூறியுள்ள தீபக், தமிழ்நாடு அரசு அவரது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், இதுசம்பந்தமான தன் ஆட்சேபங்களையும், தனது சகோதரி தீபாவின் ஆட்சேபங்களையும் அரசு பரிசீலிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், பொதுப் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தீபக், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது பொதுப் பயன்பாடு அல்ல என்று கூறியுள்ளார்.

ஜெ.வின் சொத்து தீபா, தீபக்கிற்கு கிடைக்குமா?

வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும் எனவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், வேதா நிலையத்தின் சாவியைத் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் தீபக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

இன்று நடந்த விசாரணையில்

தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து 2017ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து தீபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர் தரப்பு கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 2017 முதல் 2020ஆம் ஆண்டுவரையில் தீபக் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கவில்லை.

தீபக், தீபா ஆகியோர் சட்டப்பூர்வ வாரிசுகள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை முதலிலிருந்து புதிதாகத் தொடங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அரசு தரப்பு வாதம்

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ”தீபக் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறுவது தவறு. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொது விசாரணையில் அவர்கள் தெரிவித்த ஆட்சேபம் கருத்தில் கொள்ளப்பட்டு, மே 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்ற தீர்ப்பை நானே எதிர்பார்க்கவில்லை - ஜெ. தீபா

தற்போது இழப்பீடு தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. இதில் வருமானவரித் துறை, தீபா, தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.

இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”மனுதாரரையும் அவரது சகோதரியையும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்த உயர் நீதிமன்றம், அறக்கட்டளை அமைத்து எட்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கும், இரு நீதிபதிகள் அமர்வில் உள்ள வழக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால், இந்த வழக்கையும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும்.

இரு வேறு தீர்ப்புகள் வருவதைத் தவிர்க்க இந்த வழக்கை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கபடுகிறது” என்று கூறி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details