சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் ஆகியோர் அடையாரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையைப் பார்வையிட்டதன் பின் (செப்.13) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 'விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரே வேலை ரெய்டு. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறது. நாட்டில் ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல பிரச்னைகள் உள்ளன. சிங்காரச் சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள்.
மடிக்கணினி வழங்கவில்லை; தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். பஸ் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி, மின் கட்டணம் என்று பல்வேறு கட்டண உயர்வு பிரச்னையைப் பேச விடாமல் திசை திருப்ப இந்த ரெய்டு. மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்தார். எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு இப்படி ரெய்டு விடுகின்றது.