சென்னை:செல்போன் சேவை துண்டிக்கப்படவுள்ளதாக கூறி ஓடிபி எண்ணைப் பெற்று 13 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர், கொல்கத்தாவிற்குச் சென்று ஜம்தாரா சைபர் கிரைம் மோசடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஜார்கண்ட் ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிஷ்வ நாத் மண்டல், பாபி மண்டல், ராம்புரோஷாத் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், 148 கிராம் தங்கம், 1 ஹோண்டா சிட்டி கார், 19 ஏடி எம்கார்டுகள், 160 சிம் கார்டுகள், 20 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல் துறைக்கு நன்றி
இந்த கும்பலை பிடிக்க சைபர் கிரைம் காவல் துறையினர் கொல்கத்தா சென்றபோது அவர்களுக்கு தமிழ் அலுவலர் ஒருவர், உதவியதாக இருந்ததாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு காவல் துறை வெளிமாநிலங்களுக்குச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்க செல்லும்போது அந்த மாநில காவல் துறை போதுமான ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் எனக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த சூழலில் கொல்கத்தாவில் டிஐஜி அந்தஸ்தில் உள்ள தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர் சுதாகர், மேற்கு வங்க கேடரில் தேர்வாகி ஹவுரா நகரில் காவல் ஆணையராக பணிபுரிந்து வரும் இவர், ஜம்தாரா கும்பலை பிடிக்க பெரிதும் உதவியாக இருந்துள்ளார். குறிப்பாக இருப்பிடம், சைரன் வாகன வசதி, மொழிபெயர்ப்பாளர், உணவு போன்றவற்றை கொடுத்து உதவி புரிந்துள்ளார். இவருக்கு சென்னை காவல் துறை உயர் அலுவலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பயிற்சி பெற்று மோசடி
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஏழ்மை நிலையில் உள்ள ஜம்தாரா மாவட்டத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிற மாநிலத்திற்கு சென்று பல பேர் பணிபுரிந்து வருவதாகவும், இதனால் தங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வந்து அதையே வாழ்க்கையின் லட்சியமாக மாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.