ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு,கே.ஓ.பி.சுரேஷ்,சேகர் ஆகியோரின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, "மத்திய அரசின் புதிய வரைவுக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். அரசாணை 145-ன்படி தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசாணையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரே தொடக்கப் பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு செய்தியாளர் சந்திப்பு இதனால் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களால் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கவனம் செலுத்த முடியாமல் போகும். இதன் மூலம் படிப்படியாக தொடக்க கல்வித் துறையும் மூடும் நிலைக்கு கொண்டு செல்லப்படும்". எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ’புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் பொழுது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட அளவில் நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 6ஆம் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 13-ஆம் தேதி கல்வி மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த முறை ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தியபோது தமிழ்நாடு அரசு அளித்த வாக்குறுதியை நம்பி ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்பினோம். ஆனால் தற்போது வரை முதலமைச்சரை சந்திக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதலமைச்சர் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் திட்டமிட்டபடி எங்களுடைய போராட்டம் அடுத்தகட்ட நிலைக்கு செல்லும் என எச்சரிக்கை விடுத்தார்.